அதிசயங்கள் (சித்திக்கு முன்)

சங்கராச்சாரியரின் சந்தேகத்தை நிவர்த்தி செய்த பெருமான்

ஒருமுறை காஞ்சி காமகோடி பீட சங்கராச்சாரியார் சுவாமிகள் சென்னை வந்திருந்தபோது, சமஸ்கிருதத்தில் அவருக்கிருந்த சந்தேகங்களைத் தீர்க்க அங்கிருந்த பக்தர்களிடம் சமஸ்கிருதத்தில் தேர்ந்த பண்டிதர்கள் எவரேனும் இங்கு உள்ளனரா என்று விசாரித்தார். அங்கிருந்த பக்தர் ஒருவர் பெருமானின் பெயரைக் கூறினார். சங்கராச்சாரியார் சுவாமிகளின் வேண்டுகோளுக்கிணங்க பெருமானும், தொழுவூர் வேலாயுத முதலியாரும் அவரைக் காணச் சென்றனர். சங்கராச்சாரியார் சுவாமிகளின் சமஸ்கிருத சந்தேகங்களை பெருமானின் கட்டளைப்படி தொழுவூர் வேலாயுத முதலியார் நிவர்த்தி செய்தார். பெருமானின் சீடரான தொழுவூர் வேலாயுத முதலியாருக்கே இவ்வளவு புலமையிருக்க, பெருமானின் மொழிப் புலமை எப்படிப்பட்டது என்பதை நாம் நன்கு உணரலாம்.

இரசபஸ்பத்தில் பெருமானின் பரந்த அறிவு

ஒரு நாள் இஸ்லாமிய அன்பர் ஒருவர் வந்து இரகசியமாக இரசபஸ்பம் செய்வதற்குரிய மூலிகை ஒன்றின் பெயரைப் பெருமானிடம் கூறினார். பெருமானோ மிகவும் சத்தமாய் எல்லோருக்கும் கேட்கும்படியாக, “இரசபஸ்பம் செய்வதற்குத் தாங்கள் கூறியது தவிர மற்ற மூன்று மூலிகைகள் உள்ளன; அவை இன்னின்ன” என்று கூறினார். இதுகேட்டு அவ்வன்பர் வெட்கித் தலைகுனிந்தார்.

ஆசை உண்டு அமைப்பு இல்லை

ஆறுமுக முதலியார் பணக்காரராக அய்யாவிடம் குளிகை மணி வேண்டும் என்று கேட்டார். அய்யா மிளகு பிரமாணமுள்ள இரு குளிகைகளை கையில் வைத்தார். அந்த மிளகு அளவுள்ள குளிகைகளையே தாங்க முடியாமல் கிழே வைத்துவிட்டார் அந்த முதலியார். ‘இது உண்மை நெறிக்கு ஏற்புடையதில்லை. ஆகவே இவ்வெண்ணத்தை விட்டுவிடுங்கள்’ என்று பெருமானார் நல்லறிவு போதித்தார்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை

ஒரு நாள் சாலையிலிருந்த அன்பர்கள் அய்யாவிடம் தாங்கள் உடல் நலம், நீள் ஆயுள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தொன்றை அருளுமாறு வேண்டினர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற அய்யா கரிசாலை வகைகளையும், அதன் பெருமையையும் எடுத்துக்கூறி சேங்கொட்டையை நல்ல மண்ணில் உரமாகக் கலந்து வகை செய்தார். உரத்தைப் பாத்தியிலிட்டு பொற்றாலை, கையாந்தகரை முதலியவற்றை நட்டு ஆடு, மாடுகள் மேய்ந்துவிடாமல் அன்பர்களிடம் காத்து வரச்சொன்னார்கள். அன்பர்களும் அவ்வாறே காத்து வந்தனர்.

ஒருமுறை அய்யா கருங்குழிக்குச் செல்ல நேர்ந்தது. அந்நேரம் அன்பர்கள் தங்கள் கடமையை மறந்து களிப்பில் மூழ்கி சீட்டாட ஆரம்பித்தனர். சீட்டாட்டத்தில் ஆர்வமிகுந்து தங்களை மறந்து காலத்தைப் போக்கினர். அந்நேரம் பயிரைக் கவனிக்காததால் மாடு பயிரை மேய்ந்துவிட்டது. கருங்குழிக்குச் சென்று திரும்பிய அய்யா இதனை அறிந்து அன்பர்களிடம் “உங்களுக்குப் பக்குவ காலம் வரவில்லை” என்று கூறித் தேற்றினார்.

சன்மார்க்கியாக மாறிய வல்லுநர்

காரணப்பட்டு ச.மு.கந்தசாமிப்பிள்ளை என்பவர் கல்வி கேள்விகளில் சிறந்தும், இன்னிசையில் நன்கு தேர்ச்சிபெற்றும் விளங்கியதோடு தமிழ் மொழியிலும் பற்றுடையவராய்த் திகழ்ந்தார். ஆனால், அவ்வப்போது அவர் மயங்கி விழுந்தார். தனக்குற்ற நோயை எண்ணி வருந்திய அவர் எவ்வித சிகிச்சையும் பலனின்றி அய்யாவின் பெருமையைக் கேட்டறிந்து தனது குறையை நீக்க அய்யாவிடம் வேண்டினார்.

கருணையே வடிவான அய்யா விபூதி கொடுத்து அவரின் நோயைக் குணப்படுத்தியதோடு தனது மாணவர்களில் ஒருவராகவும் கந்தசாமிப்பிள்ளையை ஏற்றார். அன்றுமுதல் அய்யாவின் பெருமையையும், புகழையும் பேசியும், பாடியும், சன்மார்க்கச் சொற்பொழிவாற்றியும், கொலை புலை மறுத்தல் பசியாற்றுவித்தல் முதலிய ஜீவகாருண்ய ஒழுக்கங்கள் நிறைந்த சுத்த சன்மார்க்கியாகவும் விளங்கிய அவர் தொழுவூர் வேலாயுத முதலியாருக்கு அடுத்தபடியாகத் திகழ்ந்தார்.

சரித்திரக் கீர்த்தனை, சற்குரு வெண்பா அந்தாதி, குருநேச வெண்பா, சித்திவிலாச நாமாவளி ஆகியவற்றையும், அய்யாமீது அரிய பல பாடல்கள்பாடி பிரபந்தத்திரட்டென வெளியிட்டும், திருவருட்பா பாடல்கள் முழுவதும் ஒரே நூலாக 1924-ல் வெளியிட்டும் வந்த கந்தசாமிப்பிள்ளை அய்யாவின் கட்டளையை மேற்கொண்டு நிறைவு செய்யும் பணியில் தன் காலத்தைக் கழித்து வந்தார். அதனால், அய்யாவின் திருவருளுக்குப் பாத்திரமானார்.

சுத்த ஞானியின் அடையாளம்

ஒருமுறை பெருமான் கூடலூர் அய்யாசாமிப் பிள்ளை என்ற அன்பருடன் சூரிய ஒளியின்கீழ் நின்று கொண்டிருந்தபோது அவரிடம், “சுத்த ஞானியின் அடையாளம் என்ன?” என்று அய்யா வினவினார். அய்யாசாமிப் பிள்ளை விடை தெரியாது அமைதியாக இருந்தார். பெருமான் அவரிடம் “சுத்த ஞானிக்கு அடையாளம் அவரது நிழல் கீழே விழாது” என்றார். பெருமானின் நிழல் கீழே விழாததால் அவரின் பெருமையை இதன்மூலம் அறியலாம். இதன்மூலம் அவர் அடைந்த சுத்த சித்தியையும், முத்தேக சித்தியையும் அறியலாம்.

புகைப்படத்தில் விழாத அய்யாவின் படம்

ஒருமுறை அய்யாவின் புகைப்படத்தை எடுக்க சென்னையிலிருந்து மாசிலாமணி முதலியார் என்பவரை அன்பர்கள் சிலர் அழைத்து வந்தனர். அவர் புகைப்படம் எடுத்த எட்டு முறையும் அய்யாவின் புகைப்படம் விழவில்லை, அய்யாவின் வெள்ளை ஆடைமட்டுமே புகைப்படத்தில் விழுந்தது. ஒளி தேகத்தைப் பெற்ற அய்யாவின் உடல் புகைப்படத்தில் விழாதது இயல்பே.

தமிழே தந்தை மொழி

ஒரு சமயம் மடத் தலைவர் ஒருவர் வள்ளலார் சுவாமிகளிடம் தன் சமஸ்கிருத சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டு அவரிடம், “தமிழ் மொழி சிறந்தது. எனினும், சமஸ்கிருதம்தான் உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி” என்று கூறினார். உடனே சுவாமிகள், “சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழிதான். ஆனால், தமிழ்தான் எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி”. என்று கூறினார்.

ஜீவகாருண்யத்தின் பலன்

ஒருநாள் பெருமானார் அருணாச்சல படையாச்சியையும், வேங்கடாசல படையாச்சியையும் அழைத்து “நீங்கள் புலால் உண்பதை நிறுத்தினால் உங்கள் வயலில் போன போகத்தைவிட ஐந்து மடங்கு அதிகம் விளையும்” என்று அறிவுறுத்தினார். அவர்களும் பெருமானின் சொல்லைக்கேட்டு புலால் உண்பதைக் கைவிட்டு ஜீவகாருண்யத்தைக் கைகொண்டனர். அந்த வருடம் பெருமானின் அருளாசியின்படி அவர்கள் வயலில் ஐந்து மடங்கு அதிகம் விளைந்து அவர்கள் வசதி படைத்தவர்களானார்கள். அதனால், விளைச்சலில் ஒரு பகுதியை தருமச்சாலைக்குத் தானமாகக் கொடுத்து மகிழ்ந்தனர்.

ஜீவகாருண்யத்தின் எல்லை

ஒருசமயம் அன்பர்கள் சிலர் ஜீவகாருண்யத்தின் எல்லையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காண்பிப்பது என்றும், மற்றொருவர் ஜீவகாருண்யம் என்பது எல்லா உயிர்கள் மற்றும் தாவரங்களிடமும் இரக்கம் காண்பிப்பது என்றும் வாதிட்டுக் கொண்டிருந்தனர். பெருமான் அவர்களிடம் “ஜீவகாருண்யம் எவ்வளவு தூரம் பரந்துள்ளதென்று அறிவீர்களா” என்று கேட்டுவிட்டு அதை விளக்க ஒரு கதை சொன்னார். ஜீவகாருண்யத்தைக் கடைப்பிடிக்கும் பெரியோர் இருவர் ஒரு தெருவழியே நடந்து சென்றனர். ஒருவர் கால்பட்டு மண் கட்டி ஒன்று உடைந்தது. உடனே, உடனிருந்தவர் மயங்கினார். மயக்கம் தெளிந்து எழுந்த அவர் “ஒன்றுபட்டிருந்த மண்கட்டி இரண்டாகிவிட்டதே, அதன் இயற்கைநிலை குலைந்துவிட்டதே என்று வருந்தினேன், மயக்கமானேன்” என்றார்.

இதன்மூலம் மனித இனம், விலங்கினம், தாவர இனம் ஆகியவற்றிற்கு மட்டுமன்றி ஜடப்பொருட்களுக்கும் ஜீவகாருண்யம் உண்டு என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர்.

பெருமானின் சக்தியால் கட்டுண்ட பாம்பும், பெருமானின் கருணையும்

குறிஞ்சிப்பாடியிலிருந்து செவ்வாய்க்கிழமைதோறும் பெருமானைத் தரிசிக்க வடலூர் வரும் செட்டியார் ஒருவர் ஒரு நாள் காலைக்கடன்களை முடிக்க செடியருகில் உட்கார, பாம்பு ஒன்று அவரைத் தீண்ட சீறிக்கொண்டு வந்தது. இதைக் கண்டு பதறிய செட்டியார் பெருமானின் பெயரை மூன்றுமுறை உச்சரித்து பாம்பு நகராதவாறு அவர்மீது ஆணையிட்டார். பாம்பு ஆகாரமின்றி அசைவற்றுக் கிடந்தது. செவ்வாய்க்கிழமை தரிசிக்க வந்த செட்டியாரிடம் பெருமான் “பிச்! ஓர் உயிர் மூன்று நாட்களாகப் பட்டினியாகக் கிடக்கின்றது. ஆணையை விடுவியுங்கள்” என்று கட்டளையிட்டார். பெருமானின் பெருங்கருணையை உணர்ந்த செட்டியார் அவர் கூறியவண்ணமே ஆணையை விடுவிக்க பாம்பு ஊர்ந்துசென்று புற்றில் நுழைந்தது.

சாமவேதத்திற்கு விளக்கமளித்த அய்யா

அய்யா சொற்பொழிவாற்றிக் கொண்டிருக்கும்போது அவரின் சாமவேதப் புலமையை சோதிக்க எண்ணிய நான்கு சாஸ்திரிகள் அவரை அணுகினர். அய்யா சொற்பொழிவின் போதுசாஸ்திரிகள் எண்ணியிருந்த அச்சாம வேதபாகத்தினையே விளக்கியருளினார். இதைக்கண்டு திகைத்த நான்கு சாஸ்திரிகளும் அய்யாவின் அகண்ட அறிவையும், அருள்ஞான சக்தியையும் எண்ணி மனம் உருகிச் சென்றனர்

வழக்கறிஞருக்கு துணைநின்ற பெருமான்

விருத்தாசலம் வழக்கறிஞர் வெங்கடேச ஐயர் தன் துணைவியாருடன் வடலூரில் நடக்கும் சொற்பொழிவைக் கேட்க சனிக்கிழமைதோறும் இரவில் புறப்பட்டு வந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு செல்வது வழக்கம். இதற்காக ஆள்நடமாட்டமே இல்லாத காட்டுப்பகுதியில் சுமார் மூன்று மைல் தூரம் நடந்து வரும்போது அவர்களுக்குமுன் இரண்டு தீவர்த்திகள் செல்லும். இந்த அதிசயத்தைக் கண்டு, வள்ளல்பெருமான் தன்னைக் காப்பதை உணர்ந்த ஐயர் தன் உத்தியோகத்தைவிட்டு விலகி தன் துணைவியாருடன் வடலூரிலேயே வள்ளற்பெருமானின் திருவடியை நினைந்து வாழ்வாராயினர்.

தருமச்சாலையை பெருமானின் அன்பர் சுப்பராய பரதேசி என்பவர் மேற்பார்வையிட்டு வந்தார். அவர் அக்கம்பக்கத்திலுள்ள கிராமங்களில் தருமச்சாலைக்குப் பணம் வாங்க ஆளரவமற்ற பகுதிகளில் செல்லும்போது பலசமயங்களில் அவர்முன் ஆளின்றி இரண்டு தீவர்த்திகள் செல்வதைப் பார்த்திருக்கின்றார். இந்த நேரங்களில் பெருமான் தன்னை பாதுகாப்பதை உணர்ந்து பயமின்றிச் செல்வார்.

பிள்ளைப்பேறு அளித்த பெருமான்

புதுச்சேரிக்கும் மஞ்சக்குப்பத்திற்கும் இடையே உள்ள ரெட்டிச் சாவடியில் அமீனாவாக இருந்த மாயூரம் சிவராம ஐயர் மிகுந்த வசதி படைத்தவர். ஆனால், அவரது மனைவிக்கு கிரக தோஷம் இருந்ததால் குழந்தைச்செல்வம் இல்லாமல் இருந்தார்கள். சிவராம ஐயர் வள்ளலாரிடம் பிள்ளைப்பேறு வேண்ட, பெருமான் ஐயரிடம் வடலூருக்கும், பண்ணுருட்டிக்கும் இடையில் பெண்ணையாற்றின் கரையிலுள்ள புலவனூரில் ஒரு சத்திரம் கட்டுங்கள், இறைவன் திருவருளால் ஆண்பிள்ளை பிறக்கும் என்று கூறி அருளினார். சிவராம ஐயரும் அவ்வாறே செய்ய பெருமானின் அருளால் அவருக்கு ஆண்குழந்தை பிறந்தது.

அன்பர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தல்

பெருமான் எப்போதும் தன் தலையை மறைத்து முக்காடு இட்டிருப்பார். ஒரு சமயம் வலது கண்ணை மறைத்து முக்காடிட்டு இருந்தார். அருகில் இருந்த அன்பர்கள் இதை பெருமானிடம் கேட்க தைரியமில்லாமல் எட்டு வயதுச் சிறுவனை அனுப்பிக் கேட்டனர். சிறுவன் பெருமானிடம் “ஏன் உங்கள் வலக்கண்ணை மூடியிருக்கிறீர்கள்” என்று கேட்க பெருமானும் யார் கேட்டார்கள் என்பதை அறிந்து அன்பர்களை அருகில் அழைத்து தனது முக்காட்டை விலக்கி வலக்கண்ணைக் காட்டினார். கண்மலர்ந்ததும், சூரியக் கதிரினும் ஒளிமிக்க பேரொளி வெளிப்பட அதைக் கண்டு அன்பர்கள் கண்கூசி நின்றனர். “நீங்கள் எம்முடன் நெருங்கிப் பழகுவதற்கு ஏதுவாக அப்படி மூடி மறைத்திருந்தோம்” என்று கூறி அவர்களின் ஐயத்தை நிவர்த்தி செய்தார்.

மலை சுவாமிகளும் குருக்களும் கொண்ட ஆசை

வள்ளற்பெருமான் முடித்து வைத்திருந்த வகார முப்பூவை, வைத்திய முப்பூ எனத் தவறாக எண்ணி மலைச் சுவாமிகளும், குருக்களும் தங்களது தேகத்தை மூப்பு நெருங்காது வச்சிர தேகமாக ஆக்கிக் கொள்ள விரும்பினர்.

இதனை அறிந்த பெருமான் ஒரு நாள் காலை குச்சி ஒன்று கொண்டு வந்து அதன் நுனியில் துணியைச் சுற்றி முப்பூவை தொட்டு முள்ளங்கிக் கிழங்கில் அழுத்தி வைக்க அது பனிக்கட்டிபோன்று கரைந்து போயிற்று. “இத்தகைய கொடிய காரம் உள்ள வாத முப்பூவை உண்டால் சரீரம் தாங்காது” என்ற உண்மையை பெருமானார் உணரச் செய்தார்.

அம்பா புரத்து ஐயர் கண்பார்வை திரும்பப் பெறுதல்

தங்கம் வெள்ளி போன்றவை செய்யும் ரசவாத வித்தையை விளக்கும் பொழுதும், நோய்களை நீக்கவும், முப்பூ மூலிகைகள், குளிகை செய்யவும் நேரிட்டபோது அருகில் இருந்து கண்டு வந்தார் வேம்பு ஐயர். இவை அனைத்தையும் கண்ட வேம்பு ஐயருக்கு ஆசை வந்து யாரும் அறியாத போது பெருமானாரிடமிருந்த மருந்தை களவாடிச் சென்றார்.

அதை பொன் செய்ய எண்ணி நெருப்பிலிட்டு ஊதி பரிசோதித்தபோது, அது வெடித்து கண்பார்வை இழந்தார். பின், எங்கெங்கோ சென்று எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் பலனின்றி செய்த தவற்றை உணர்ந்து பெருமானிடம் மன்னிப்பு கோர, பெருமானார் தண்ணீரால் வேம்பு ஐயரின் கண்களை அலம்பி கண்பார்வை கிடைக்கச் செய்தார்.

எங்கும் நிறைந்த பெருமான்

பெருமான் மேட்டுக்குப்பத்தில் கொடி கட்ட வேண்டி ஒப்பந்ததாரர் ஒருவரை கம்பம் வாங்க சென்னைக்கு அனுப்பினார். சென்னை சென்று திரும்பிய ஒப்பந்ததாரர் வியாபாரிகள் கம்பத்தின் விலையை மிக அதிகமாகக் கூறுவதாகவும், தன்னால் முடிவெடுக்க முடியவில்லை என்றும் பெருமானிடம் கூறினார். இதைக் கேட்ட பெருமானார் ஒப்பந்ததாரரை சென்னைக்குச் செல்லும்படியும், தாம் அங்கு வருவதாகவும் கூறினார். ஒப்பந்ததாரரும் சென்னை சென்று மரக்கடைக்குச் செல்ல பெருமான் அங்கு வந்தார். குறைவான விலையில் வியாபாரியிடமிருந்து கம்பத்தை வாங்கி ஒப்பந்ததாரரிடம் கொடுத்த பெருமான் தாம் அவரை மேட்டுக்குப்பத்தில் சந்திப்பதாகக் கூறி விடை பெற்றுச் சென்றார்.

அடுத்த நாள் மேட்டுக்குப்பத்திற்கு வந்த ஒப்பந்ததாரர், பெருமான் சீடர்களிடம் சொற்பொழிவாற்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். ஒப்பந்ததாரர் அங்கிருந்தவர்களிடம் முந்தின தினம் தான் பெருமானுடன் சென்னையில் கம்பம் வாங்கச் சென்று வந்த விபரத்தைக் கூற அங்கிருந்தவர்கள் அதிசயித்தனர். அவர்கள் பெருமான் முந்தின தினம் முழுவதும் தங்களுக்கு மேட்டுக்குப்பத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்ததை ஒப்பந்ததாரரிடம் கூறினர். அனைவரும் பெருமானின் சர்வ வல்லமையையும், எங்கும் இருக்கும் திறனையும் கண்டு வியந்தனர்.

மீனவர்களின் அறியாமையை அகற்றுதல்

மேட்டுக்குப்பத்தில் உள்ள மீனவர்கள் இருவர் பெருமானார் தங்கியிருந்த வீட்டின் வழியே வலைகளை ஏந்திச் சென்றனர். வள்ளற்பெருமானார் அவர்களிடம் “நீங்கள் வீசுவது சிறு வலையா? பெருவலையா?” என்று வினவ அவர்கள் “சிறு வலை” என்று பதில் உரைத்தனர்.

பெருமானும் அவர்களிடம் “ஒரு உயிர் வாழ எத்தனை உயிர்களைக் கொல்வீர்கள். உங்கள்மீது குற்றம் இல்லை. உண்பவர் இல்லையென்றால் உயிர்க்கொலையும் இல்லை. ஆகவே, இனி இத்தொழிலை விட்டுவிட்டு வேறு தொழில் செய்யுங்கள்” என்று அறிவுறுத்தினார். பெருமான்முன் சம்மதித்தவர்கள் மீண்டும் ஏரியில் வலைவீசி மீன்பிடி தொழிலை தொடர்ந்தனர். வீசிய வலை பல துண்டுகளாக அறுந்து தண்ணீரோடு தண்ணீராகக் கலந்தது. மீனவர்கள் தாம் செய்த தவற்றை உணர்ந்து வள்ளலாரிடம் மன்னிப்புக் கேட்டு வேறு தொழில் செய்தனர்.

பெருமானின் சிவபுராண உரை

ஒரு நாள் இரண்டு வித்வான்கள் மேட்டுக்குப்பத்திற்கு வந்து பெருமானிடம் “திருவாசகத்தின் முதல் சிவபுராணத்திற்கு உரை சொல்ல வேண்டும்” என்று வேண்டினர். வள்ளல் பெருமானும் “சொல்லுவோம். கேட்கத் திறனுண்டோ” என்று வினவினார். மேலும் புராணத்தின் முதலில் உள்ள “நமச்சிவாய” என்பதில் முதல் எழுத்தாகிய ‘கரத்தைப் பற்றி தொடர்ந்து அறுபத்தி நான்கு லட்சணங்களை இரண்டு மணி நேரம் பேசுங்கால் தொழுவூர் வேலாயுத முதலியார்க்கே தொடர்ந்து அமர்ந்துணரும் பொறுமை இல்லாமல்போக வந்திருந்த வித்வான்களைப் பற்றி கேட்கவா வேண்டும். பெருமான் உரையைக் கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர். மேலும் கேட்கப் பொறுமையும், திறனும் இல்லை என்பதை ஒப்புக் கொண்டு துல்லியமாக விளக்கியதைக் கேட்டு வணங்கி விடைப் பெற்றுச் சென்றனர்.

மந்திரவாதிகளைக் காத்தல்

பெருமானின் ஆசி பெறவேண்டி மந்திரவாதிகளாகிய கர்ம சித்தர்கள் நால்வர் மேட்டுக்குப்பத்திற்கு இரவு சுமார் பன்னிரண்டு மணியளவில் வந்து சேர்ந்தனர். வருகின்ற வழியில் காளி தேவதை பயமுறுத்தி அச்சப்படுமளவு பெரிய உருவத்தைக் காட்டி அச்சுறுத்தியது. மந்திரவாதிகள், “உனக்கு விலங்கு போடுவோம்” என்று கூறி வந்து சேர்ந்தனர். மேட்டுக்குப்பத்திற்கு வந்த கர்ம சித்தர்கள் பெருமானை வணங்கி ஆசி பெற்று பின்னர் வரும் வழியில் காளி தேவதை அச்சுறுத்தலையும் தாம் அதற்கு அளிக்க இருக்கும் தண்டனையையும் விளக்கினர். உடனே பெருமான் “ஒன்றும் செய்யாதீர்கள். நம்மிடம் வந்து போவதாகச் சொல்லுங்கள்” என்று கூறி அனுப்பி வைத்தார். அவ்வாறு அவர்கள் செய்ய மிகப் பெரிய உருவத்தோடு பயம் தோன்றும்படி வந்த காளி தேவதை மிகச் சிறிய உருவத்துடன் குறுகிப் பணிந்துச் சென்றாள்.

பிரமதண்டிகா யோகம்

பிரமதண்டிகா யோகம் இரும்புத் தீச்சட்டிகளுக்கு இடையே அமர்ந்து செய்யப்படும் யோகமாகும். சித்தி வளாகத் திருமாளிகை அறையில் பெருமானார் சிவானந்த நித்திரையில் நிலைத்து பிரமதண்டிகா யோகத்தில் இருக்கும் சமயம் அவரது பொன்மேனிக்கு இருமருங்கும் பெரிய இரும்புத் தகளியில் நிலக்கரி அனல் மிளிர அதற்கிடையில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து இருப்பது வழக்கம்.

ஒரு நாள் குருக்கள் திடீரென பெருமானது அறைக்குள் நுழைய அவரது கால்பட்டு இரும்புத் தகளியில் இருந்த நெருப்பு சிதறி பெருமான்மீதும் குருக்கள்மீதும் விழுந்தது. இதைக் கண்ட குருக்கள் நெருப்பினை அகற்ற முயல அவர் கை சூடுபட்டு வருந்தினார். ஆனால், பெருமான்மீது சிதறிய நெருப்பால் அவருக்கோ, அவரது ஆடைக்கோ எந்த சேதமும் இல்லை. பெருமான் குருக்களைப் பார்த்து “உமக்கேன் பதைப்பு. நம்மை அது பாதிக்காது” என்று கூறி அவரது கையில்பட்ட சூட்டின் தழும்பை நீக்கி அருளினார்.

நொண்டி ஆடு உபதேசம் பெற்றது

மேட்டுக்குப்பத்தில் பெருமானார் சொற்பொழிவை நொண்டி ஆடு ஒன்று தவறாது வந்திருந்து தனது இடது காதைச் சாய்த்தவண்ணம் கண்ணிமைக்காது கேட்கும். சொற்பொழிவு முடிந்தவுடன் அனைவரோடும் சேர்ந்து தனது இரு கால்களையும் இழுத்துக் கொண்டு சித்தி வளாகத்தை வலம் வந்து போகும். மனிதனாகப் பிறக்க வேண்டிய உயிர் முன்பு செய்த ஊழ் வினையால் ஆடு மாடுகளாக பிறக்க நேரிடுகிறது. மேட்டுக்குப்பத்தில் உள்ள அந்த நொண்டி ஆட்டிற்கு தினந்தோறும் தழையும், தண்ணீரும் தடைபடாது கொடுக்க அன்பர்களுக்கு பெருமானார் கட்டளையிட்டார்.

அவதானியரின் அகங்காரத்தை அடக்குதல்

மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத்திருமாளிகையில் வள்ளற்பெருமான் சொற்பொழிவு நிகழ்த்தும் காலங்களில் மக்கள் கூட்டம் கடலென திரண்டு வந்து பெருமானின் அமுத மொழிகளைக் கேட்டு மகிழ்ந்தனர். பெருமான் பேசும்போது அருகில் இருப்பவர்களுக்கும், தூரத்தில் இருப்பவர்களுக்கும் ஒலி மாறுபாடின்றி அருகில் பேசுவதாகவே விளங்கும்.

இவ்வாறு நடைபெறும் சொற்பொழிவின்போது ஒருமுறை நூறு அவதானம் செய்யும் ஐயங்கார் ஒருவர் சபையோர்முன் வந்து நின்றார். வள்ளற்பெருமானின் சொற்பொழிவை ஊன்றி கவனித்துக் கொண்டிருந்த மக்கள் அவதானியரைக் கவனிக்கவில்லை. உடனே, ஐயங்கார் பெருமானை நோக்கி “வித்தையிலும், ஞானத்திலும் சாமிக்குள்ளதுபோலவே சபையும் எனக்கு இடம் தரவில்லையே” என்றார். அருகிலிருந்த சிலர் இதைக் கேட்டு இடம் தந்தனர்.

இடம் பெற்றபிறகு அவர் பெருமான் அருகிலேயே மெதுவாக நகர்ந்து உட்கார்ந்ததை அறிந்த பெருமானார் “சபை இடம் தந்ததோ” என்று வினவ, “அப்போதைக்கு இல்லை” என்று அவதானியர் கூற, “அப்போது என்பது எக்காலம்” என்று பெருமான் கேட்க, அதற்கு அவதானியர் “இறந்த காலம்” என்று கூற, பெருமானார் “ஒரு காலத்தின் அளவு என்ன” என்று மீண்டும் கேட்க, விடை தெரியாது அவதானியர் திகைத்தார். உடனே பெருமான், “ஆயிரத்தெட்டு செந்தாமரை இதழ்களை அடுக்கி ஒரு ஊசியால் கடைசிவரை அழுத்திய காலமே ஒரு கால அளவு” என்று விளக்கி “நீர் இடம் பெற்றதும், பெறாததும் நிகழ்காலமே” என்று கூறினார்.

புருஷோத்தம ரெட்டியாருக்கு வழி காட்டல்

வள்ளற்பெருமான் கருங்குழியில் வசிக்கத் தொடங்கிய காலம் முதல் மேட்டுக்குப்பத்துச் சித்திவளாகத் திருமாளிகையில் இருந்தவரை அவரின் நெருங்கிய நண்பராகவும், அனுக்கத் தொண்டராகவும் இருந்தவர் புருஷோத்தம ரெட்டியார்.

பெருமானின் தேவையை அறிந்து அவருக்குத் தண்ணீரை ஐந்தில் மூன்று பங்காக கொதிக்க வைத்து, அவற்றில் சர்க்கரை கலந்து பெருமானுக்குக் கொடுப்பார். பெருமான் அவ்வப்போது சில நாட்கள் சிவானந்த அனுபவத்தில் இருந்த காலங்களில் அவரது அறையில் இருந்த துரிசைத் தொடைத்தல், சத்திய ஞான தீபத்தைக் கண்காணித்தல் முதலியவற்றைச் செவ்வனே செய்து வந்தார் புருஷோத்தம ரெட்டியார்.

ஒரு நாள் வள்ளலார் சிவானந்த அனுபவத்தில் இருந்தபோது கண்மலர் போன்ற ஒன்று மலர்ந்து பேரொளி வீச அதனைக் கண்ட ரெட்டியார் மயக்கமுற்று விழுந்தார். இதனைப் பார்த்த மற்றவர்கள் வள்ளலாரிடம் ரெட்டியார் நிலையை எடுத்துச் சொல்ல அவரும் “நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். அவர் தானே எழுவார்” என்று உத்தரவிட்டார்கள்.

நான்கைந்து நாட்கள் கழித்து எழுந்த ரெட்டியார் பின்பு மெல்ல வெளியில் வந்து நடமாடினார். ஆனாலும் மாதக் கணக்கில் ஒன்றும் பேசாமல் மோன நிலையிலேயே இருந்தார். பின்பு, ரெட்டியார் பெருமானிடம் “எனக்குச் சாதனை செய்யும் மார்க்கம் ஒன்று அருளிச் செய்தல் வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார். வள்ளற்பெருமான் ரெட்டியாரிடம் “உமக்குச் சாதனை ஒன்றும் வேண்டாம். சாதனை செய்யின் சிறு ஒளி தோன்றும். சித்திகள் நடக்கும். அதைக் கண்டு ஆணவம் உண்டாகும்” என்றார்.

ரெட்டியார் பெருமானின் அறிவுரைப்படி கொல்லாமை என்னும் ஜீவகாருண்ய ஒழுக்க சீலராகவும், எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவராகவும் விளங்கினார். வள்ளற்பெருமானின் கட்டளைப்படிச் சாலையிலும், சபையிலும் தொண்டுள்ளத்துடன் செயற்கரிய செயல் செய்து பெருமானின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார்.

வேட்டவலமும் சைவமும்

வேட்டவலம் ஜமீன்தாரான அருணாசல வசந்த கிருஷ்ணவாணாதிராய அப்பாசாமி பண்டாரியார் என்பவருக்கு இரண்டு மனைவியர். ஒருவர் பிரம்ம ராட்ஷச பேய் பிடித்தும், மற்றொருவர் மகோதரம் நோயாலும் துன்புற்று வந்தனர். ஜமீன்தார் பல வைத்தியர்களையும், மந்திரவாதிகளையும் மனைவியருக்கு வைத்தியம் செய்தும், கோவில்களுக்கு விலங்கினங்களை பலி கொடுத்தும் பலனில்லை. வீட்டு வேலையாள் ஒருவரின் அறிவுரையைக் கேட்டு ஜமீன்தார் நம்பிக்கையின்றி வள்ளலாரை அழைத்ததோடு அவரைச் சோதிக்கவும் எண்ணினார். பெருமான் வரும் நேரம் ஒரே மாதிரியான இரு இருக்கைகளை வீட்டு அறையில் போட்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இருக்கையில் பெருமான் அமர்ந்தால்தான் அவரை நம்புவதாக வேலையாளிடம் கூறினார்.

பெருமான் வீட்டிற்குள் வந்து ஜமீன்தார் நினைத்திருந்த அதே இருக்கையில் அமர்ந்தார். ஜமீன்தார் பெருமானைப் புரிந்து கொண்டு தான் அவரைச் சோதிக்க நினைத்ததை எண்ணி வருந்தி பெருமானிடம் மன்னிப்புக் கேட்டார். பின்னர், பெருமான் முதல் மனைவியைப் பார்த்ததும் பிரம்ம ராட்ஷசப் பேய் பெருமானைக் கும்பிட்டு அவரின் கட்டளைப்படி வெளியேறியது. பெருமான் ஜமீன்தாரின் மற்றொரு மனைவிக்கு சிறிதளவு திருநீற்றை மூன்று பகுதிகளாகக் கொடுத்து குணமாக்கினார்.

இரு மனைவியரும் குணமடைந்ததைக் கண்டு மகிழ்ந்த ஜமீன்தார் பெருமானின் கட்டளைப்படி ஜமீனின் எல்லைக்குட்பட்ட பகுதிக்குள்ளும், காளி கோவிலிலும் விலங்கினங்களை பலி கொடுப்பதைத் தடை செய்தார். ஜமீன்தாரின் குடும்பமும் சைவமாக மாறியது. பெருமான் கேட்டுக் கொண்டபடி ஜமீன் எல்லைக்குட்பட்ட பகுதியில் பாம்புகளை கொல்வதைத் தவிர்த்து பாம்பு பிடிப்பவர் ஒருவரை வேலைக்கு அமர்த்தி பாம்புகளை வேட்டவலம் எல்லைக்கு வெளியில் கொண்டு விடும்படி ஏற்பாடு செய்தார்.

அருளாளர் அருளிய அற்புதங்கள்

கூடலூர் மஞ்சக்குப்பத்தில் வசிக்கும் இராமகிருஷ்ணன், அய்யாவின் சீடர். அவர் அங்கிருந்து தினமும் இரவில் வந்து அய்யாவின் அருளுரையை கேட்டுச் செல்வது வழக்கம். இருட்டைக் கண்டு பயப்படும் அவருக்கு பயம் வரும் பொழுதெல்லாம் அவர் பயத்தை நீக்கும் பொருட்டாக பெருமானின் அருளால் ஒருவர் அவருக்குச் சற்று முன் செல்வது போல் தோன்றும். வீட்டை நெருங்கியதும் அவர் மறைந்து விடுவார். நடுவில் யார் என்று உற்றுப் பார்த்தால் கண்ணுக்கு ஒன்றும் தெரியாது.

சேலத்தைச் சேர்ந்த வணிகரின் பணியாள் ஒருவன் உள்நாக்கு வளர்ந்து துன்பப்படுவதைப் பற்றி அய்யாவிடம் கூற அவர் விபூதி கொடுத்து அவனைக் குணமாக்கினார்.

அய்யா அவர்கள் திண்ணையில் அமர்ந்து அருளுரை ஆற்றும்பொழுது கண்நோயால் முகம் வீங்கி ஒருவன் தெருவழியாக செல்வதைப் பார்த்து, அவனைக் கூப்பிட்டு கண்களில் ரஸ்தாளி பழம் வைத்துக் கட்டுமாறு கூற, அவனும் அப்படி செய்ய குணமானான்.

வெண்பா வேந்தர்

வேங்கட ரெட்டியாரின் தம்பி புருஷோத்தம ரெட்டியார் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறி மதுரை திருஞான சம்பந்த சுவாமிகள் மடத்தில் தங்கியிருந்தார். அதை வேங்கட ரெட்டியார் வள்ளலாரிடம் சொல்லி வருத்தப்பட வள்ளலார் மதுரை சந்நிதானத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். புருஷோத்தமருக்கு அறிவுரை கூறி அவரைத் திரும்பி அனுப்பும்படி கேட்டுக் கொண்டார். அம்மடத்தில் வள்ளலாரின் தெய்வீக ஆற்றலை நன்குணர்ந்த திருக்கழுகுக்குன்றம் திருச்சிற்றம்பல ஞானியார் சுவாமிகளும் தங்கியிருந்தார்கள்.

மதுரையில் சந்நிதானம் கடிதத்தை படித்தார். அவரருகில் ஞானியார் சுவாமிகளும் கணக்கிலவதானி தேவிப்பட்டினம் முத்துசாமியும் இருந்தார். கடிதத்தில் கேட்டபடி புருஷோத்தமரை ஊருக்கு அனுப்பிய சந்நிதானம், கடிதத்தை அருகிலிருந்த இருவரிடமும் காட்ட, அதை படித்த அவதானி வள்ளலாரின் கடிதத்தில் கற்றுணர்ந்த பாண்டித்தியம் தெரியவில்லை, எழுத்துகள் பாமரத்தன்மையாக இருப்பதாகக் குறை கூறினார்.

இது குறித்து ஞானியார் சுவாமிகளுக்கும் அவதானியருக்கும் விவாதம் உண்டயிற்று. விவாதத்தின் முடிவில் வள்ளலாரிடம் இலக்கண விதியில் அமைந்த ஒர் கடிதம் எழுதுமாறு கடிதத்தின் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது. முதலில் இதற்கு பதில் அனுப்ப மறுத்த வள்ளலார் பின்பு அருகில் இருந்தவர்களின் வற்புறுத்தலுக்கிணங்கி பதில் கடிதம் பாதி எழுதினார். மீதி கடிதத்தை வேலாயுத முதலியாரை முடிக்குமாறு கூறினார்.

பதில் கடிதத்தை படித்த அவதானிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மனம் இல்லாமல் இவ்வாறு எழுதும் கடிதம் எழுதுபவருக்கு மட்டும்தான் புரியும், நான் இதற்கு ஒரு பதில் கடிதம் எழுதுகிறேன். வள்ளலாரால் அதை படிக்க முடியாது என சவால்விட்டார். அதன்படி ஒரு வெண்பாவை எழுதி அனுப்பினார். வள்ளல் பெருமான் அவதானியின் வெண்பாவிற்கு விளக்கத்தையும் கொடுத்து அந்த வெண்பாவிற்கு அவதானி அறியாத புதிய விளக்கத்தையும் கொடுத்தார். பெருமானின் மேன்மையுணர்ந்த அவதானியார் பெருமானிடம் மன்னிப்பு கோரி மனம் மாறினார்.

அடியாரை ஆட்கொண்ட அருட்குரு

திருக்கோவிலூருக்குப் பக்கத்திலுள்ள சின்னஞ்சிறு ஊர் திருநறுங்குன்றம். அதில் ஒரு குன்றின்மேல் ஞானவாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார் கல்பட்டு ஐயா. அவர்தம் தவக் காட்சியில் தன் குருநாதர் தன்னை நேராக வந்து ஆட்கொள்வதாகக் கண்டார்.

முற்றும் உணர்ந்த பெருமான் அவ்விடம் சென்று சாந்தமாக, “கல்பட்டு ஐயா! தங்கள் தியானத்தின் நோக்கத்தை நிறைவேற்ற ஆண்டவர் அருளியவாறு அடியேன் வந்திருக்கிறேன்! கண்திறந்து பாருங்கள்” என்று கூற கல்பட்டு ஐயாவின் செவிகளில் அவை மந்திரச் சொற்களாக ஒலித்தன! என்றுமில்லாத பரவசம் ஆட்கொள்ள, அவர் மெல்லக் கண்திறந்து பார்த்தார்! எதிரே கருணைத் திருவுருவான வள்ளலார்! இவ்வாறாக குரு தன் சீடரை ஆட்கொண்டார்.

பொறாமையால் வந்த விளைவு

வள்ளலாரின் கொள்கைகளை கடைபிடித்து வரும் மக்கள் கூட்டம் அன்றாடம் வருவதும், போவதுமாக இருந்தனர். இதை கண்டு பொறாமை கொண்டு வேங்கடசாமி நாயக்கர் என்பவர் அவர்களை பயமுறுத்தலானார். சுத்த சன்மார்க்கிகளிடம், “உங்களைச் சார்ந்தவர்கள் சிலர் அப்பாவி மக்களை மிரட்டி தம்வசம் ஆக்கவும், தாம் மேற்கொண்டுள்ள கொள்கைகளை திணிக்கச் செய்வதாகவும் மக்களை மிரட்டுவதாகவும் புகார் வந்துள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்டால் அவர்கள்மேல் நடவடிக்கை எடுப்பதோடு சிறைச்சாலைக்கும் போக நேரிடும்” என்றும் கூறி பயமுறுத்தினார்.

இவரின் பேச்சும், செயலும், மிரட்டலும் ஆக பதினான்கு நாட்கள் ஓடின. இவ்வாறு மற்றவர்களை பயமுறுத்தி அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் கோபத்திற்கு ஆளான அவர் பதினைந்தாவது நாள் குற்றவாளியாக சிறைக்குச் சென்றார்.

இளைஞனின் மனமாற்றம்

இருபது வயதுடைய முகமதிய இளைஞன் ஒருவன் பெருமானைப் பற்றித் திரித்து பேசி வந்தான். ஒரு நாள் அவன் தன் உடல் முழுவதும் எண்ணெய் தடவி பஞ்சை ஒட்டிக் கொண்டு பெருமானிடம் வந்து “உடம்பெல்லாம் சிரங்கு, உபத்திரவம் தாங்க முடியவில்லை. தீர்த்தருள வேண்டும்” என்று வேண்டினான். உண்மையை அறிந்துகொண்ட பெருமானார் “இது சில நாட்களில் குணமாகும்“ போய் வாரும் என்றார். ஆனால் அவனோ “இச்சிறு பிணியைக்கூட தீர்க்க உம்மால் முடியவில்லை. அதை நானே தீர்த்துக் கொள்கிறேன்” என்று கூறி ஒட்டிய பஞ்சை தட்டினான். பஞ்சு ஒட்டிய இடமெல்லாம் புண்ணும், புழுவும் ஏற்பட்டு அவனை வருத்தியது. அவன் பெருமானின் காலடியில் விழுந்து “அறியாமையால் சோதித்து விட்டேன். என்னை மன்னித்து இப்பிணி தீர்த்து அருள வேண்டும்” என்றான். “அருட்பெருஞ்சோதியை எண்ணி சாலைக் கிணற்றில் நீராடினால் தீரும்” என்றார் பெருமான். அவ்வாறே செய்ய குணமாகி அவனும் பெருமானின் அன்பர்களில் ஒருவனாகி அன்றுமுதல் புலால் உண்பதை வெறுத்து சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிப்பவன் ஆனான்.

ஆந்திர பிராமணர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்தல்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பிராமணர்கள் தங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டி வடலூர் வந்தனர். பெருமானைக் கண்டு தரிசித்து “சாத்திரத்தில் சொன்னபடியெல்லாம் செய்தும் சித்தி அடைய முடியவில்லையே” என்று கூறினர்.

அவர்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்ய பெருமானார் தம் கையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்திருக்க சில நிமிடங்களில் அது உருகிக் கீழே விழுந்தது. இதைக் கண்ட பிராமணர்கள் “மனம் கட்டலாம்; ரசம் கட்ட முடியாது” என்று கூற, பெருமானாரோ “மனம் கட்ட முடியாது; ரசம் கட்டலாம்” என்று கட்டியுங்காட்டினார். சந்தேக நிவர்த்தி செய்த பெருமானாரின் ஆற்றலையும் வல்லமையையும் அறிந்து அவரை வணங்கி ஆசிரியராகக் கொண்டு விடை பெற்றுச் சென்றனர்.

வடலூரில் நேரலையாக சிதம்பர தரிசனம்

சிதம்பர தரிசனம் காண வெளியூர் அன்பர்களோடு, மற்றவர்களும் கலந்து கொண்டு வடலூர் வருவது வழக்கம். அவ்வாறு ஒரு சமயம் வந்தபோது வள்ளற்பெருமான் உற்சவத்திற்கு விரைவில் புறப்படாமையால், வந்த அன்பர்களில் சிலர் உற்சவ காலம் நெருங்க நெருங்க இருப்பு கொள்ளாது சிதம்பரத்திற்கு புறப்பட்டுச் சென்று விட்டனர். ஆனால் எப்பொழுதும் பெருமானோடு சென்று தரிசனம் காணும் அன்பர்கள் சிலர், கடைசி நாள்வரை காத்திருந்து சிதம்பர தரிசனம் தவறியதே என்று எண்ணி ஏங்கி வருந்தினர். வள்ளற்பெருமான் அவர்களை சாலைக்கு வரும்படி அழைத்தார். அவர்களது ஆசையை நிறைவேற்றும்பொருட்டு சத்திய தருமச்சாலையின் மத்தியில் திரை ஒன்று போடச் செய்து, சிதம்பர தரிசனத்தை நேரலையாகக் காணச் செய்தார். அன்பர்கள் அனைவரும் சிதம்பர தரிசனத்தை கூட்டத்தில் சிக்கி அல்லல்படாது அமைதியாக அமர்ந்து கண்டு மகிழ்ந்தனர். பெருமானின் அருளால் கண்ட தரிசனத்தால் பெருமானை வணங்கி மனநிறைவோடு விடை பெற்றுச் சென்றனர்.

பெருமானின் பெருங்கருணை

சித்தரை மாத வெப்பத்தால் சாலையில் உள்ள சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதனால் வேதனைப்பட்டவர்களைக் கண்டு மனம் இரங்கிய பெருமானார் ஒவ்வொருவரையும் பார்த்து, “அப்பா காய்ச்சலை எனக்கு கொடுத்து விடுகிறாயா” என்று கேட்டுக் கொண்டே ஒர் அறையினுள் சென்றார். ஐந்து நிமிடத்திற்குப் பின்னர் அனல் மயமாக அறையிலிருந்து வெளியே வந்தார். சாலையினுள் காய்ச்சலால் வருந்திய அனைவரும் காய்ச்சல் நீங்கி இன்புற்றனர்.

பன்மொழிப் புலவருக்கு உண்மை உணர்த்தியது

பினாகபாணி முதலியார் ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் கொண்டவர். வள்ளலார் பற்றியும், தருமச்சாலையை பற்றியும் அதில் இருப்பவர்கள் பற்றியும் அவருக்கு தரக்குறைவான எண்ணம். தன் பாண்டித்தியத்தை பறை சாற்றவும் அய்யாவின் மொழியறிவை சோதிக்கவும் சந்தேகம் கேட்பது போல் வடலூர் வந்தார். அவருக்கு உண்மையை உணர்த்த விரும்பிய அய்யா முதலியாரின் ஆறு மொழி பாண்டித்தியம் பற்றிஉரைத்தார். முதலியாரின் ஐந்து வயது மகனின் கையை வள்ளலார் பிடித்தார். அவர் அருளால் அவனுக்கு ஆறு மொழிகளில் பாண்டித்தியம் உண்டாயிற்று. அச்சிறுவனிடம் அவரின் சந்தேகம் பற்றிக் கேட்டால் அவன் அவருக்கு விடை அளிப்பான் என்று கூற பினாகபாணி, வள்ளலாரின் கைப்பட்டதிற்கே இவ்வளவு சிறப்பா என்று உண்மை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.

ஞானசித்தரின் சித்துகள்

பெருமானார் சில சமயம் தருமச்சாலைக்கு வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத்தில் இருப்பார். அப்பொழுது சுவாமிகளின் தலைக்கும், சூரியனுக்கும் நடுவே தீப் பிழம்பு ஒன்று தோன்றும்.

தேவநாதம் பிள்ளையின் மகனாகிய ஐய்யாசாமியின் தொடையில் கட்டி வந்து துன்பப்பட்டார். அதை கேள்வியுற்ற பெருமானார் விபூதியோடு ஒரு மருத்துவ பாடலும் கொடுத்தனுப்பினார். விபூதியை பூசி அப்பாடலில் சொல்லியபடி நடந்துவர ஐய்யாசாமி குணமானார்.

இதற்கு முன்பும் ஒருமுறை ஐய்யாசாமி உடல் நலக்குறைவால் பெரிதும் பாதிக்கப்பட்டு சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தேவநாதம் பிள்ளை மிகவும் வருத்தப்பட்டு பெருமானை வேண்டினார். வடலூரில் தருமச்சாலையில் உபதேசம் செய்து கொண்டிருந்த பெருமான் அதே சமயம் கூடலூரில் தோன்றி தேவநாதம் பிள்ளை வீட்டுக்குச் சென்று ஐய்யாசாமிக்கு விபூதியிட்டு சற்று நேரம் இருந்துவிட்டு திரும்பினார். நோயிலிருந்து அன்றிரவே விடுதலை ஆனார் ஐய்யாசாமி.

மறுநாள் தன் மகனுடன் வடலூர் சென்றார் தேவநாதம் பிள்ளை. அவரை கண்ட பெருமானார் தான் நேற்றிரவு கூடலூர் வந்ததை யாருக்கும் கூற வேண்டாம் என கூறினார். அவர் சாலையிலிருந்த அன்பர்களிடம் விசாரிக்க பெருமானார் ஒரே நேரத்தில் இரு இடங்களிலும் இருந்தது தெரிய வந்து அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஒரு சமயம் சுவாமி திருவதிகைக்கு வழிபடச் சென்றார். அப்பொழுது அவரை பார்க்க வந்த மக்கள் கூட்டத்தின் நெரிசல் மிக அதிகமாக, நிலைமையை உணர்ந்த பெருமானார் மக்களுக்கிரங்கி ஒரே நேரத்தில் பல இடங்களிலும் காட்சியளித்தார்.

ஒரு நாள் அடிகள் தனியாக உலாவச் செல்ல நினைத்து வெளியே புறப்பட்டார். உடன் வந்தவர்களிடம் தன்னை தொடர வேண்டாம் இங்கேயே இருங்கள் என்று கூறி நடந்தார். அவர்கள் சொல்படி கேளாமல் தொடர அவர் அவர்களிடமிருந்து தொலைவில் காணப்பட்டார். அவர்கள் தொடர்ந்து ஓடி வர - பெருமான் இன்னும் அதிகமான தொலைவில் காணப்பட்டார்.

கருங்குழியில் கல்லாங்குளம் அருகில் ஒரு நாள் அடிகள் உலாவும்பொழுது ஒருவர் உபதேசம் பெறுவதற்காக அருகில் வந்தார். உடனே அடிகள் தொலைவில் காணப்பட்டார். அவர் நெருங்க நெருங்க அடிகள் இன்னும் தொலைவில் காணப்பட்டார். அந்த நபர் அப்படியே அயர்ந்து நின்று விட்டார்.

தருமச்சாலையில் ஒரு நாள் உணவு குறைவாக இருந்தது. நிறைய அன்பர்கள் உணவு உண்ண வந்து விட்டார்கள். தருமச்சாலையை கவனிக்கும் நபர் அய்யாவிடம் நிலைமையை கூறினார். அய்யா உடனே எழுந்து தன் கையால் உணவு பரிமாறினார். அத்தனை அன்பர்கள் உண்ட பிறகும் உணவு மிச்சம் வந்தது.

ஒரு நாள் தருமச்சாலையில் அரிசி தீர்ந்து விட்டது. சண்முகம் பிள்ளை அவர்கள் அய்யாவிடம் தெரிவிக்க அய்யா சற்று நேரம் தியானித்து பின் நாளை வேண்டியவை வரும் என்றார். மறுநாள் ஒருவர் மூன்று வண்டிகளில் அரிசியும் ஒரு வண்டியில் பிற உணவு வகைகளும் கொண்டு வந்தார். முந்தைய நாள் இரவில் கனவில் தனக்கு உத்தரவு வந்ததாக அவர் கூறினார்.

பேராசையால் வந்த வினை

சென்னையில் பெருமான் இருந்த காலத்தில் ஏழை கிறிஸ்தவர் ஒருவர் பெருமானிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்க இதை அறிந்த பெருமானார் தினமும் இரண்டு ரூபாயை வெள்ளியாக்கும் திறனை அவருக்கு கொடுத்திருந்தார். அதனைக் கொண்டு வறுமையைப் போக்கி வாழ்ந்து வந்தார்.

ஆனால், ஆசைமேலிட வெள்ளிக்குப் பதிலாக பொன்செய்யும் ஆற்றல் தெரிந்தால் ஆடம்பரமாய் வாழலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. அவர் எண்ணத்தைப் பெருமானிடம் கூற பெருமான் அவர் கையில் உள்ள வெள்ளி பூண் கட்டிய தடியை வாங்கி பூணை மட்டும் தட்டி எடுத்து கையில் சில நிமிடங்கள் வைத்து தங்கமாக்கி அவர் மனதை குளிரச் செய்தார். அவ்வாறு ஆக்கிய பூணை தருமச் சாலைக் கிணற்றில் எறிந்து “போய் வாரும், எல்லாம் சித்தியாகும்” என்று அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பி சென்னை திரும்பிய கிறிஸ்தவர் முன்போலவே வெள்ளியைச் செய்யத் தொடங்கிய போது வெள்ளியாகவில்லை. உள்ளதும்போய் அன்றாடப் பிழைப்புக்கு வழி இல்லாது தனது பேராசையால் வந்த வினையை நினைத்து மனம் வருந்தினார்.

கள்வர்க்கும் காருண்ணியம்

கூடலூரிருந்து குள்ளஞ்சாவடி வந்த அய்யா இரவாகிவிட்டதால் அங்குள்ள சத்திரத்துத் திண்ணையில் தங்கினார். அவரைக் கண்ட தலைமைக் காவலர், குளிர் அதிகம் என்பதால் அவர் அய்யாவிற்கு போர்வை ஒன்று கொடுத்தார். அவரும் கூடவே தங்கிவிட்டார். நள்ளிரவில் கள்வன் ஒருவன் அய்யாவின் போர்வையை பிடித்து இழுக்க அய்யா அவன் எடுக்க ஏதுவாக திரும்பிப் படுத்தார். காவலர் கள்வனைப் பிடித்துவிட்டார். அய்யா, காவலரிடம் வறுமை காரணமாக களவாடும் ஏழை அவன் என்று கூறி அப்போர்வையை அவனுக்குக் கொடுத்து களவுத் தொழிலை விட்டுவிடுமாறு அறிவுரை கூறினார். அவனை விடுவித்தும் விட்டார்.

ஒருசமயம் மஞ்சக்குப்பம் சிரஸ்தேதார் இராமச்சந்திர முதலியார் அய்யாவை தம்மூரில் வந்து சில நாட்கள் தங்குமாறு விண்ணப்பிக்க, அதன்படி அனைவரும் வண்டியில் சென்றனர். இரவு குள்ளஞ்சாவடி வரும்பொழுது இரு கள்வர்கள் வண்டியை தாக்க வண்டிக்காரனும் சேவகனும் ஓடி ஒளிந்தனர். முதலியார் கையில் இருந்த வைர மோதிரத்தை கழற்றும்படி கள்வர்கள் அதட்ட, அய்யா, “அவசரமோ?” என்று வினவ கள்வர்கள் அடிப்பதற்காக தடியை உயர்த்தினார்கள். உயர்த்திய கைகள் செயல் அற்று போக, கண் பார்வையும் நீங்கியது. தவறை உணர்ந்த கள்வர்கள் தம் செயலுக்காக மன்னிப்பு கேட்டு, பெருமானை சுற்றி வந்து நலம் பெற்றனர். களவுத் தொழிலை விட்டு விடுவதாக பெருமானிடம் உறுதி கூறி சென்றனர்.

இச்சையற்றவர் இயற்றிய சித்துக்கள்

தேவநாயகத்தின் தந்தை ஒரு யோகி. அவர் இறக்கும் தறுவாயில் தேவநாயகத்திடம் “முக்காடு அணிந்து கொண்டு கையில் பிரம்புடன் இதுதான் உன் தந்தையின் சமாதியா? என்று யார் விசாரிக்கிறார்களோ அவரை உனது குருவாக ஏற்றுக்கொள்” என்று கூறிவிட்டு இறந்தார். அவ்வாறே பெருமானார் வந்து விசாரிக்க தேவநாயகம் பெருமானின் சீடரானார்.

இரசவாதத்தில் உள்ள ஆசையால் பொருளை இழந்த தேவநாயகத்திடம் பெருமானார் இரும்புத் தகடொன்றைப் பொன்னாக்கிக் காட்டினார்கள். பிறகு அதைத் தூர எறிந்துவிட்டு, இச்சை அற்றவனுக்கே இது கூடும் எனவே இதை விட்டுவிடு எனக் கூற தேவநாயகம் திருந்தினார்.

ஒருசமயம் சுவாமிகள் செஞ்சிமலையைச் சுற்றிப் பார்க்கப் தேவநாயகத்தையும் அழைத்துச் சென்றார். சுவாமிகள் மலைமீது பலவிடத்தும் சுற்றித் திரிந்தார். உச்சி வேளையில் சுவாமிகளோடு அலைந்ததில் தேவநாயகம் மிகவும் களைத்துப் போனார். கொடிய பசித்துன்பம் வேறு அவரை வாட்டி எடுத்தது. சுவாமிகள் அவரின் வாட்டத்தையும் பசியையும் புரிந்து கொண்டார். தேவநாயகத்தை ஒரு மரநிழலில் அமரச் செய்துவிட்டு, சற்று தூரம் சென்று விட்டுத் திரும்பி வரும்பொழுது ஒருகையில் பெரிய லட்டும், மறுகையில் தண்ணீரும் கொண்டு வந்து அவற்றை தேவநாயகத்திடம் கொடுத்து லட்டை சாப்பிட வைத்து, தண்ணீரைக் குடிக்கச் செய்தார். அவர்தம் களைப்பும் பசியும் நீங்கிற்று, செம்பை வாங்கிக் கொண்டு, போய் கொடுத்துவிட்டு வருவதாகச் சொல்லிச் சிறிது தூரம் சென்று திரும்பினார். அப்போது சுவாமிகள் கையில் செம்பு இல்லை!

இறைவன் தாமாக வருவாரா? நாமாகச் செல்ல வேண்டுமா?

கூடலூர் அப்பாசாமிச் செட்டியார் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பெருமானும், மற்ற அன்பர்களும் பேசிக் கொண்டிருந்தபோது இரு வித்வான்கள் பெருமானிடம் வந்து “எங்களுக்குள் ஒரு விவாதம்; அதைத் தாங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும் என்றனர். பெருமான் அவர்களிடம், “அப்படியா? சொல்லுங்கள். எதைப் பற்றிய விவாதம்?” என்று கேட்டார். வித்வான்களில் ஒருவர் “சுவாமி! அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறேன் நான். இவரோ கைவல்லியத்தில் உள்ள ‘இந்தச் சீவனால் வரும்’ என்னும் பாட்டை எடுத்துக்கூறி, எனது சொல்லை மறுக்கிறார். இதுதான் எங்களுக்குள் உள்ள விவாதம்” என்றார். பெருமான் இதைப் புரிய வைக்க கீழ்க்கண்ட கதையை விளக்கினார்.

ஒரு நிர்வாண சந்நியாசி தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அது பெண்கள் வந்து செல்லும் பகுதி என்று எண்ணிய ஒருவன் சந்நியாசியைக் கல்லால் அடித்தான். மற்றொருவன் எந்த ஆசையும் இல்லாத அந்த சந்நியாசிக்கு ஒரு பழம் கொடுத்தான். இதைக் கண்ணுற்ற மற்றொருவன் இம்மூவரையும் ஒரு நீதிபதியிடம் அழைத்துச் சென்று நடந்த அனைத்தையும் கூறினான். நீதிபதி சந்நியாசியிடம் “யார் உங்களை கல்லால் அடித்தது” என்று வினவ, சந்நியாசி “யார் எனக்கு பழம் கொடுத்தாரோ, அவர் என்னைக் கல்லால் அடித்தார்” என்று பதில் கூறினார். நீதிபதி, “யார் உங்களுக்குப் பழம் கொடுத்தது” என்று கேட்க சந்நியாசி, “யார் என்னைக் கல்லால் அடித்தாரோ அவரே எனக்குப் பழம் கொடுத்தார்” என்றார். ‘எல்லாம் இறைவன் செயல்’ என்று வாழும் இவருக்கு பழம் கொடுத்தவருக்கும், கல்லால் அடித்தவருக்கும் பேதம் இல்லை என்று அனைவரும் புரிந்து கொண்டனர்.

இந்த கதையைக் கூறிய பெருமான் “யார் பேதமற்று எல்லாவற்றையும் ஒன்றாகப் பார்க்கிறார்களோ அவர்களுக்கு ‘எல்லாம் இறைவன் செயல்’ என்பது உண்மை. மற்றவர்கள் இறைவனை அடையகடும் முயற்சி செய்யவேண்டும்” என்று கூறி வித்வான்களின் சந்தேகத்தை தீர்த்து வைத்தார்.

வள்ளலாரைத் தீண்டி இறந்த பாம்பு

வள்ளலார் சில காலம் அப்பாசாமி செட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒரு சமயம் மாலை வேளையில் அன்பர்களோடு செட்டியாரின் வாழைத் தோட்டத்தில் உலாவச் சென்றார். வள்ளலார் சிறிது நேரம் வாழைத் தோட்டத்தின் அழகைக் கண்டு ரசித்து அதைச் சுற்றி வந்து ஒரு வாழை மரத்தடியில் வந்து நின்றார். அப்போது ஒரு நல்ல பாம்பு வள்ளலாரின் தலையில் தீண்டியது. இதைக் கண்டு பதைத்த செட்டியாரிடம் வள்ளலார், “பதைக்க வேண்டாம். மருந்தாகும் திருநீற்றைக் கொண்டு இதை குணமாக்கலாம் என்று கூறி தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் திருநீற்றைப் பூசினார். பெருமானைத் தீண்டிய பாம்பு கீழே இறந்து விழுந்தது. இதனைக் கண்ட அன்பர்கள் அதிசயித்து நின்றனர்.

சித்தாதி சித்தர்

அப்பாசாமி செட்டியாரின் தமையனார் இராமசாமி செட்டியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனில்லை. தன் தமையனாரை அழைத்துப் போய் சுவாமிகளைப் பார்த்து விவரத்தைச் சொனனார் அப்பாசாமி செட்டியார். சுவாமிகள் இராமசாமி செட்டியாரிடம் திருநீறு கொடுத்து மூன்று வேளை பூசி உட்கொள்ளுமாறும் கூறினார். அவ்வாறே தமையனார் செய்ய, அவர் நாக்கில் உண்டான புற்றுநோய் பூரணமாகக் குணமாகிவிட்டது!.

கூடலூரிள்ள அப்பாசாமி செட்டியார் வீட்டில் சுவாமிகள் தியானத்தில் இருந்தார். அன்பர்கள் புறத்தில் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒருவர் இவர்களைத் தாண்டி உள்ளே சென்றார். வந்தவர் யார் என்று அறிந்து கொள்ள அன்பர்கள் உள்ளே சென்றனர். அங்கே ஒருவரும் இல்லை. ஒரு லட்டுதான் இருந்தது. சுவாமிகளிடம் விசாரிக்க அவர், வந்தவர் ஒரு சித்தர் என்றும், அவர் இப்பொழுது காசியில் இருப்பார் என்றார். அவர் கொடுத்த லட்டுதான் இது என்றார். அதைக் கேட்ட அன்பர்கள் சித்தரின் ஆற்றலையும் அத்தகையைவர் தம் குருவை காண வந்ததால் தம் குருவின் பெருமையையும் எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

திருவருள் பெருமை

ஒருவர் சாது என்ற போர்வையில் கையில் தடியுடன் கோட்டு, சட்டை அணிந்தவராய் திரிந்தார். அவரது வார்த்தையை எதிர்த்தோ மறுத்தோ பேசமுடியாமல் அனைவரும் அவரின் முரட்டுத்தனத்துக்கு அஞ்சி, அவரை முரட்டு சாது என்று கூறினர். ஒரு சமயம் முரட்டு சாது தங்கியிருந்த ஊருக்குச் சென்ற பெருமானார், அன்பர் ஒருவரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது ஆடு ஒன்று ஒரு கால் இல்லாத குட்டியை ஈன்றது. அக்குட்டியால் பால் அருந்த இயலாது எழுவதும் விழுவதுமாக இருந்தது. இதைக் கண்டு கண்களில் கண்ணீர் ததும்ப அமர்ந்திருந்த பெருமானிடம் அங்கு வந்த முரட்டு சாது “கண்ணீர் வடித்தால் ஆட்டுக் குட்டிக்கு கால் வந்துவிடுமா?” என்று கேட்க பெருமானாரோ “இறைவன் திருவருள் கிட்டுமாயின் ஏற்படலாம்” என்றார்.

அதையும் பார்ப்போம்” என்று அமர்ந்திருந்தார் முரட்டு சாது. பெருமான் மனமுருகி இறைவன்மீது பத்து பாடல்கள் இயற்றபாட ஆரம்பித்தார். பாடி முடிவதற்குள் ஆட்டுக்குட்டிக்குக் கால் வந்து எழுந்து சென்று பால் அருந்தியது. ஆணவம், அகங்காரம், அலட்சியம் அனைத்தையும், கோட்டு சட்டைகளுடன் கழற்றி எறிந்துவிட்டு முரட்டு சாது பெருமானின் காலில் விழுந்து வணங்கி உண்மை சாதுவாய் மாறினார்.

ஜீவகாருண்ணியத்தால் வந்த பலன்

அமாவாசை என்பவர் செத்த மாடுகளை தின்று வந்தார். அய்யா அவரிடம் மாடுகளை தின்னாமல் புதைக்கும்படி கூற அவர் அவ்வாறே நடந்து வந்தார். சிறிது காலம் கழித்து எவ்வகையிலும் மீன், மாமிசம் சாப்பிடக் கூடாது எனக் கூற, அதற்கு அமாவாசை எப்படியும் சைவ உணவுக்கும், மற்ற செலவுகளுக்கும் கணக்கிட்டு, ஒரு நாளைக்கு அரை ரூபாயாவது வேண்டும் எனக் கூற, அய்யா அவருக்கு அரை ரூபாய் ஒன்றை மஞ்சள் துணியில் கட்டி கொடுத்து, “இதை வைத்துக்கொண்டால், தினம் எட்டணா வருமானம் கிடைக்கும்” என்று கூறினார்.

அய்யாவின் சொல்படி அவருக்கு தினமும் எப்படியாவது எட்டணா கிடைத்து விடும். மாமிசத்தை விட்டதோடு தினசரி எட்டணாவும் கிடைத்தது, ஜீவகாருண்ணியத்தை கடைபிடித்ததால் வந்த பலன் இது.

அன்பரின் அதீத நம்பிக்கை

செட்டியார் ஒருவர் பன்னிரண்டு வருட காலமாக குன்ம நோயால் அவதிப் பட்டு வந்தார். பெருமானின் கீர்த்தியை கேட்டு அவரை வணங்கி பிணியைப் போக்க வேண்டினார்.

பெருமானோ கடவுளை நினைந்து துதிக்கும்படி கூறினார். அதற்குச் செட்டியார், “சுவாமி, தாங்கள்தான் கடவுள்” என்று நம்பிக்கையோடு கூற பெருமானார் விபூதி கொடுத்து நோயைப் போக்கினார்.

அன்பர் ஆசையை நிறைவேற்றல்

கேசவ ரெட்டியார் என்பவர் பெருமான்மீது கொண்ட அன்பு காரணமாக எங்கு எதைப் பேசினாலும், யாரிடம் பேசினாலும் பெருமானைப் பற்றி அவர் ஆற்றிய உரைகளைப் பற்றி சொல்லாமல் இருக்க மாட்டார். அவர் மனதில் பெருமானுக்கு அமுது செய்விக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அது எப்போது கிட்டும் என்று எதிர்பார்த்து ஏங்கி இருந்தார்.

இதை அறிந்த அன்பெனும் பிடியில் அகப்படும் பெருமானார் ஒரு நாள் இரவு திடீர் என்று அவர் வீட்டு முன்பாகத் தோன்றினார். பெருமானைக் கண்ட மாத்திரத்தில் திகைத்து நின்ற ரெட்டியார் பின் சுதாரித்து அவரை வணங்கி வரவேற்றார். பெருமானோ, “நும் விருப்பப்படி உண்ண வந்தோம்” என்றார். சிறப்பாக அறுசுவை உணவை கொடுக்க நினைத்த ரெட்டியார் திடீர் வருகையால், அன்று சமைத்த பருப்பு துவையலும், ரசமும் அளிக்க நேர்ந்ததை எண்ணி வருந்தினார். பெருமானார், “அன்பரே, ஏன் வருந்துகிறீர்? எனக்கு பிடித்தமான உணவைத்தான் படைத்துள்ளீர், உமது உண்மையான அன்பே முக்கியம்” என்று கூறி சந்தோஷத்தில் அவரைத் திளைக்கச் செய்தார்.

புன்செய் நன்செய்யாக மாறுதல்

நடராஜப் பிள்ளை என்பவர் பலமுறை அரசாங்க அதிகாரிகளுக்கு புன்செய் நிலத்தை நன்செய் நிலமாக்க மனு கொடுத்தும் பயனின்றி போயிற்று. இத்தனைக்கும் நடராஜப் பிள்ளையின் மருமகன் ஒரு தாசில்தார் ஆவார்.

அவர் பெருமானை தரிசித்து இதுபற்றி முறையிடவே பெருமான் விபூதி கொடுத்திட அதை அவர் புன்செய் நிலத்தில் தெளித்துவிட அவை நன்செய் நிலமாக மாறி நல்ல மகசூலைத் தந்தது.

சூன்யத்தை நீக்குதல்

தலைமைக் காவல் அதிகாரி விஜயராகவலு நாயுடு மீது கொண்ட பொறாமை காரணமாக பிறர் வைத்த சூனியத்தால் தேக நலம் குன்றி வலிமையிழந்து துன்பப்பட்டு வந்தார்.

எவ்வளவோ சிகிச்சை செய்தும் பலனின்றி மேலும் நலிய நேராக பெருமானை அணுகி தன் குறையைக் கூறி நிவர்த்தி செய்ய வேண்டினார். பெருமானாரும் ஸ்ரீராம நாம பதிகம் பாடிக் கொடுக்க அதை நாயுடு தொடர்ந்து பாராயணம் செய்து வர சூன்ய நோய் நீங்கி தேக வலிமை பெற்றார்.

பேயை விரட்டுதல்

புதுச்சேரியில் உள்ள முதலியாரின் மகளை பிரம்ம ராட்ஷசப் பேய் பிடித்திருந்தது. அதை அறியாது பல சிகிச்சை செய்தும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை.

பண விரயமும், மன நிம்மதியும் இன்றி வேதனைப்பட்டு வந்த அவர் மகளுடன் வந்து பெருமானை தரிசித்தார். பெருமானின் தயவால் அவரது மகள் பூரண குணமடைய மன நிறைவோடு சென்றார்.

சுமையையும் நடுக்கத்தையும் நீக்குதல்

பிராமணர் ஒருவருக்கு பல நாட்கள் கழுத்தில் ஒரு சுமை இருப்பது போன்று அழுத்திக் கொண்டே இருந்தது. அதனால் கழுத்தை திருப்பக் கூட முடியாது வேதனைப்பட்டுக் கொண்டிருந்தபோது பெருமானின் பெருமையை அறிந்து தரிசித்து விபூதி பெற்று குணம் அடைந்தார்.

இதை கேள்விப்பட்ட 96 வயது கிழவி தன் உடல் நடுக்கத்தைப் போக்க பெருமானை தரிசிக்க எண்ணினார். அவர் தூய மனதுடனும், நல்லுணர்வுடனும் பெருமானைத் தரிசித்து வேண்ட நடுக்கம் நீங்கி சுகம் அடைந்தார்.

குன்ம நோய் நீக்குதல்

வள்ளல் பெருமான் திருவாதிரை தரிசனம் காண சிதம்பரம் சென்றார். வழியில் தன் முந்தைய வினை காரணமாக குன்ம நோயால் வருந்தி இறைவனை இடைவிடாது நினைந்து உள்ளமும், உடலும் உருகி நின்றான் ஒருவன்.

அவ்வழியாக சென்ற பெருமானைக் கண்டு வணங்கி நோயைப் போக்க வேண்டினான். பெருமான் அவனுக்கு துளசியும், நீரும் கொடுத்து பூரண குணம் அடையச் செய்தார்.

பொன் ஆசை நீக்குதல்

ரெட்டியாருக்கு பொன் ஆசை மிகுந்தது. இதை அறிந்த வள்ளல் பெருமான் குவளை ஒன்றில் தண்ணீரை நிரப்பி மணலும் இட்டு சிறிது நேரம் மூடி பின் எறிய அவை பொன் துகள்களாய் விழுந்தன. இதைப் பார்த்து ஆச்சரியப் பட்ட ரெட்டியாரிடம் “இச்சை இல்லாதவருக்கே இது கைகூடும்” என்று கூற ரெட்டியார் தன் மனதை மாற்றிக் கொண்டு பெருமானின் அனுக்கத் தொண்டரானார்.

நைனா ரெட்டி தன் மனைவிக்கு உள்ள கங்க தோஷத்தை நீக்க பெருமானை வேண்ட அவரும் தோஷம் நீங்க விபூதி கொடுத்து அருளினார்.

நீர் நெருப்பாதல்

அய்யா கருங்குழியில் வேங்கட ரெட்டியார் வீட்டில் தங்கியிருந்தார். ரெட்டியாரும் அவரது மனைவி முத்தியாலு அம்மாளும் அய்யாவுக்கு சேவை செய்து வந்தனர். அய்யா இரவு தியானம் செய்வார், அருட்பாக்கள் எழுதுவார். இரவு முழுவதும் அகல் விளக்கு எரியும். இதற்காக முத்தியாலு அம்மாள் தினமும் ஒரு கலயத்தில் எண்ணெய் வைப்பது வழக்கம். ஒரு நாள் அவ்வம்மையார் வெளியூர் செல்ல வேண்டி வந்ததால் எண்ணெய் வைக்க மறந்து சென்று விட்டார். புது கலயத்தில் பழகுவதற்காக அதில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார்.

அய்யா புதிய கலயத்தில் உள்ள நீரை எண்ணெய் என நினைத்து விளக்கில் வழக்கம்போல் ஊற்றினார், விளக்கும் விடியவிடிய நீரில் எரிந்தது. எண்ணெய் வைக்க மறந்த முத்தியாலு அம்மாள் வந்து விசாரிக்க உண்மை விளங்கியது. அனைவரும் நீர் நெருப்பாக எரிந்த அதிசயத்தை எண்ணி வியந்தனர்.

துறந்தாரும் துதிக்கும் துறவி

ஒரு நாள் சில அன்பர்களோடு மாலை வேளையில் திருவொற்றியூர் வழிபாட்டுக்குப் புறப்பட்டார் இராமலிங்கம் - ஊரை அடைந்து, வழக்கமாகச் செல்லும் வழியில் செல்லாமல் தேரடித் தெருவிற்குள் நுழைந்தார்!

ஏன் இவ்வழி என வினா தொடுத்தவர்களுக்கு, “தனக்காக ஒருவர் இந்தத் தெருவில் வெகுநாட்களாகக் காத்திருக்கிறார்!” என்று பதில் கூறினார். வீதியில் அவர்கள் பாதி தூரம் கடந்துவிட்ட நிலையில், ஒரு வீட்டுத்திண்ணையில் நிர்வாணத் துறவி ஒருவர் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்!

அத்துறவி தெருவில் போகின்றவர்களையும், வருகின்றவர்களையும் பார்த்து, அவரவர் குணத்திற்கு தக்கபடி, ‘இதோ நாய் போகிறது, நரி போகிறது, குதிரை போகிறது, கழுதை போகிறது, மாடு போகிறது, ஆடு போகிறது!” என்றெல்லாம் ஏளனம் செய்து சிரிக்கும் குணம் உடையவர்.

எல்லோரும் நிர்வாணத் துறவியைக் கடந்து சென்றார்கள். அப்போது அந்த அதிசயம் நிகழ்ந்தது!

நிர்வாணத் துறவி இராமலிங்கத்தைப் பார்த்தார்; பக்திப் பரவசமானார்! சட்டென்று திண்ணையைவிட்டு இறங்கி, நடு வீதிக்கு வந்து, ஆனந்தக் கூத்தாடியபடி, “ஆகா! இதோ, ஓர் உத்தம மனிதன் போகிறான்! இதோ, ஓர் உத்தம மனிதன் போகிறான்! இன்று தான் கண்டேன்! இதோ, ஓர் உத்தம மனிதன் போகிறான்!” என்று உரக்கக் கத்தினார்.

அதுகண்டு இராமலிங்கத்தைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

இராமலிங்கம், எல்லோரையும் பார்த்து, “அன்பர்களே! இங்கேயே இருங்கள், நான் சென்று அவரிடம் சற்றுப் பேசிவிட்டு வருகிறேன்!” என்றபடி திரும்பி நிர்வாணத் துறவியை நோக்கி நடந்தார்.

நிர்வாணத் துறவிக்கு எதிரில் வந்து நின்றார் இராமலிங்கம். “சுவாமிகளுக்கு, வந்தனம்!” என்று இருகரம் கூப்பி அவரை வணங்கி ஓரிரு வார்த்தைகள் கூறினார். நிர்வாணத் துறவி, பூரண ஞானம் பெற்றவராகி அங்கிருந்து அகன்று சென்றார்.

சுவாமிகளுக்காகக் காத்திருந்தார் துறவி. இன்று அவர் நோக்கம் நிறைவேறியது. சென்றுவிட்டார்! அன்பர்களுக்கு சுவாமிகள் அன்று அவர்களை அவ்வீதி வழியே அழைத்து வந்த காரணம் யாது என நன்றாகவே புரிந்துவிட்டது!

அருள் மழை

இராமலிங்க சுவாமி, அன்பர்களை அழைத்துக் கொண்டு, மாலை வேளையில் திருவொற்றியூர் வழிபாட்டுக்குப் புறப்பட்டார். வழியில் கடுமையான மழை வர - அனைவரும் தியாகப் பெருமானைத் தியானித்துக்கொண்டு தன் பின்னாலேயே வருமாறு கூறி மழையில் நனையாதவாறு வேறு வழியில் அன்பர்களை கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

இடி மின்னல் மழை தொடர்ந்தபோதும், அவை அவர்களை தொடாதவாறு இராமலிங்க சுவாமியின் அருளாற்றலால் அனைவரும் அதிவிரைவில் கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.

“இந்த வழியில் நாம் இதுவரை வந்ததும் இல்லை. இதைப் பற்றி பிறர் சொல்ல அறிந்ததும் இல்லை! அதிசயமாகத்தான் இருக்கிறது!” என்ற சோமு செட்டியாரிடம், இராமலிங்கம், “இது ரகசியம்!” எனக் கூறினார். இது சுவாமிகள் அன்பர்களுக்காக நிகழ்த்திய அற்புதம் என்று உணர்ந்து குருநாதரின் மகிமையைப் போற்றினர்.

கள்வனுக்கும் கருணை பாலித்தது

அடிகளார் சென்னையில் வசித்த காலத்தில் காதில் கடுக்கன் அணிந்திருந்தார்கள். ஒருமுறை அடிகளார் திண்ணையில் துயிலும்போது கள்வனொருவன் அடிகளார் காதில் அணிந்திருந்த கடுக்கனை கழற்றினான். அடிகளார் அதை அறிந்ததும் மற்றொரு கடுக்கனையும் கழற்றயேதுவாய் இருந்து கள்வன் எடுத்துக்கொள்ளுமாறு கருணை காட்டினார்.

அம்மையப்பன் இட்ட அமுது

சுவாமிகளின் அண்ணியார் சுவாமிகள் நள்ளிரவு ஆகியும் வராததால் தூங்கிவிட்டார். திருவொற்றியூர் வழிபாட்டுக்குச் சென்று விட்டு பசியோடு நடு இரவில் வீடு திரும்பினார் இராமலிங்கம். இரவில் அண்ணியாரை எழுப்ப மனமில்லாமல் திண்ணையில் படுத்துவிட்டார். மகனின் பசி பொறுக்காத ஒற்றியூர் அம்மை வடிவுடைநாயகி, அண்ணியார் வடிவில் வந்து உணவிட - சுவாமிகள் உண்டார். சற்று நேரத்தில் அண்ணியார் வீட்டிலிருந்து உணவுடன் வந்து எழுப்ப குழம்பிய சுவாமிகள் சிந்திக்க வடிவுடைநாயகி தான் அண்ணியார் வடிவில் வந்து உணவு தந்திருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தார்.

திருவொற்றியூர் அர்த்த ஜாம பூசையில் கலந்து கொண்டு அருகில் உள்ள மண்டபத்தில் அன்பர்களோடு படுத்துக்கொண்டார் பெருமானார். அனைவரும் பசியோடு இருப்பதை அறிந்த பெருமானார் ஈசனை வேண்டினார். தலைமை குருக்கள் வடிவில் வந்த ஈசன் கோவில் பிரசாதத்தை அனைவருக்கும் கொடுத்துச் சென்றார். சோமு செட்டியார், தலைமை குருக்கள் ஊரில் இல்லை என இளைய குருக்கள் பேசுவதைக் கேட்டதாகவும், அப்படியானால் வந்தது யார் என வினவ பெருமானார் கண்ணை மூடிச் சிந்திக்க ஒற்றியூர் ஈசன் காட்சியளித்தார். பெருமானார் உண்மை உணர்ந்து அன்பர்க்கு உரைக்க அனைவரும் மகிழ்ந்தனர்.

சிவலிங்கச் சித்து

அன்பர்களோடு, இராமலிங்கம் கடற்கரையிலுள்ள பட்டினத்தார் ஜீவ சமாதித் திருகோயிலுக்கு வந்தார்.

அப்போது மூதாட்டி ஒருவர் இராமலிங்கத்தின் எதிரே வந்து “தனக்கு வெகு நாட்களாக உள்ள சந்தேகத்தை தெளிவுபடுத்த வேண்டும்! திருவொற்றியூர் மணலெல்லாம் வெண்ணீறு என்று பாடினார் பட்டினத்தார். அதன் விளக்கம் என்ன?” என்று கேட்க, இராமலிங்கம் உடனே ஒருபிடி மணலை எடுத்து, அம்மூதாட்டியின் கையில் வைத்து மூடுமாறு கூறினார். அப்பொழுது அங்கு ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

அவர் கையிலிருந்த மணலெல்லாம் சிவலிங்கங்களாக மாறியிருந்தன. அதை கண்டு மூதாட்டியோடு அன்பர்களும் அப்பாடலின் உண்மையான விளக்கத்தை உணர்ந்தனர், உணர்த்திய இராமலிங்கத்தை போற்றினார்கள்!!!

ஒன்றே சிவம்

அய்யா வியாசர்பாடியில் பிரசங்கம் முடித்துவிட்டு நள்ளிரவில் மகாவித்துவான் திருமயிலை தணிகாசல முதலியார் மற்றும் சில அன்பர்களோடு பேசிக்கொண்டே நடந்துவந்தார். அப்பொழுது மிகப்பெரிய நல்லபாம்பு ஒன்றுவேகமாக அவர்களை நோக்கி ஊர்ந்து வந்தது. அதைப்பார்த்த அனைவரும் அலறிஓட, வள்ளலார் அவர்களை நோக்கி, “அன்பர்களே! அச்சம்வேண்டாம்! ஓடாதீர்கள். நில்லுங்கள். அரவம்நம்மைஓன்றும்செய்யாது! நான்சொல்வதைநம்புங்கள்!...” என்றுஉரக்கக்கூறினார்.

அய்யா சொன்னதைக் கேட்டு அவர் மீது நம்பிக்கை வைத்து அச்சம் குறைந்தவர்களாய் அவர்கள் வந்தார்கள். அதற்குள் அய்யாவை நோக்கி வந்த நல்லபாம்பு, அவரது கால்களைச் சுற்றிக்கொண்டு நன்றாகத் தலைதூக்கிப்படமெடுத்தது!

புன்னகை மாறாமலேயே அய்யா அவரிடம், “அன்பர்களே! நான் சொல்வது சத்தியம்! அரவம் நம்மை ஒன்றும்செய்யாது!…” என்றவர், பாம்பைப்பார்த்து “நடராஜப்பெருமானின் நல்ஆபரணமே! நாகராஜனே! உன்கட்டிலிருந்து என்னைவிடுவி!.. உன்தடம் பார்த்துச்சென்றுவிடு!” என்று அன்போடு அதற்குக் கட்டளையிட்டார். அய்யாவின் கால்களைச் சுற்றிக்கொண்டு படமெடுத்து நின்றிருந்த அந்தப்பெரிய இராஜநாகம், அடுத்தகணம் அவரதுகட்டளைக்குப் பணிந்து அவர்காலை விடுத்துத் தரையிறங்கி வேகமாக ஊர்ந்து மறைந்தது!

அதனைக் கண்டு வியந்து குதூகலித்தவர்களிடம், “அன்பர்களே! ஆச்சர்யப்படுவதற்கு இதில் ஒன்றுமில்லை. ‘ஒன்றேசிவம்’ என்றுணர்ந்த பலன்இது!” என்றுகூற உண்மை உணர்ந்து அனைவரும் இறைவனை துதித்தனர்.