அதிசயங்கள் (சித்திக்கு பின்)

நானுரைக்கும் வார்த்தை நாயகன்தன் வார்த்தை.

என் பெயர் சுப்பையா. நான் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்தவன். திருச்சியில் உடல் நிலை சரியில்லாத என் சகோதரரை சென்று பார்த்தோம். ஒரு நாள் முழுவதும் அந்த மருத்துவமனையில் இருந்து அவருக்கு வேண்டிய உதவியை செய்து அவரை கவனித்தோம். கிளம்பும் நேரத்தில் என் மகன் செந்தில் குமரனுக்கு (2 1/2 வயது) சிறிது காய்ச்சல் இருந்தது. அந்த காய்ச்சலுக்கு மருந்து கொடுத்து புகைவண்டியில் மீண்டும் வடலூரை நோக்கி புறப்பட்டோம். அதன் பிறகும் அவனுக்கு காய்ச்சல்குறையவில்லை. மருத்துவரின் அறிவுரை படி அவனது உடம்பில் ஒரு வெள்ளை துணியை தண்ணீரில் நனைத்து நனைத்து அவன் உடம்பு முழுவதும் துடைத்துக்கொண்டு இருந்தோம். அந்த நிலையிலும் அவனுக்கு காய்ச்சல் சிறிதளவும் குறையவில்லை. பொதுவாக அவனுக்கு காய்ச்சல் அதிகமானால் வலிப்பு ஏற்படும் என்று எங்களுக்கு தெரியும். அதன் காரணமாக நாங்கள் பயந்து ஐயாவை வேண்டியே பயணித்து கொண்டிருந்தோம். நேரம் செல்ல செல்ல எங்கள் மகனுக்கு காய்ச்சல் அதிகமாகிக்கொண்டிருந்தது. என்ன செய்வது என்று குழம்பி என் நண்பரிடம் (வள்ளலாரின் பக்தர்) மொபைல் போன் மூலம் ஆலோசனை கேட்டோம். அதற்கு அவர் ஐயாவிடம் பிராத்தித்து. “நீங்கள் இறங்கும் இடம் வரும் வரை என் பொறுப்பு அவனுக்கு எதுவும் ஆகாது” என்று வள்ளலார் உறுதி அளித்துள்ளதாக கூறினார். நாங்கள் முதலுதவி செய்ய வேண்டிய முயற்சியை எடுத்தோம். நான் அந்த புகை வண்டியின் பரிசோதகரிடம் (டி.டி.ஆர்) சென்று எங்கள் நிலைமையை அவருக்கு விளக்கி உதவி கோரினோம். அவர் இந்த புகை வண்டியில் மருத்துவர் கிடையாது. அவ்வாறு உங்களுக்கு மருத்துவர் வேண்டுமென்றால் நீங்கள் முன்கூட்டியே சொல்லவேண்டும். அப்படி சொன்னால் தான் எங்களால் அடுத்த ரயில் நிலையத்தில் மருத்துவரை ஏற்பாடு செய்யமுடியும் என்று கூறினார். மீண்டும் எங்களுக்கு குழப்பம் ஏற்பட்டது. வழியில் குழந்தைக்கு வலிப்பு வந்தால் என்ன செய்வது? ஏதாவது ரயில் நிலையத்தில் இறங்கி மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லலாம் என்றால் எங்களுக்கு அந்த ஊரில் எங்கு செல்வது என்று தெரியாமல் தவிக்க வேண்டிய சூழ்நிலை வரும் அதனால் எங்களுக்கு பயம் ஏற்பட்டது. நாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் (கடலூர்) வந்து சேர்வதற்கு இரண்டு மணிநேரம் இருந்தது. எங்களுக்கு பயமும் அதிகமாக இருந்தது. உடனே எனது வள்ளலார் நண்பரிடம் தொலைபேசியில் அழைத்து என்னுடைய சூழ்நிலையை அவருக்கு விளக்கினேன். உடனே அவர் வள்ளலாரிடம் எனக்காக தியானித்து வள்ளலார் இவ்வாறு கூறியதாகக் கூறினார். என்மேல் நம்பிக்கை வைத்து பயணம் செய் நானே உன் குழந்தைக்கு பொறுப்பு. அவர் வாக்கின்மேல் நம்பிக்கை வைத்து நாங்கள் இறங்கவேண்டிய இடம் வரும் வரை பயணிக்க தீர்மானித்தோம். என் மனைவியும் நானும் வெள்ளை துணியை நனைத்து, நனைத்து குழந்தைக்கு துடைத்துக்கொண்டிருந்தோம். இந்த சூழ்நிலையில் கடலூர் ரயில் நிலையத்தில் இறங்குவதற்கு முன்னால் என் மகன் வாந்தி எடுத்தான். ஒரு சில நிமிடங்கள் கழித்து அவனுக்கு வலிப்பு சிறிதளவு வந்தது. நாங்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையத்தை நெருங்கும் போது அவனுக்கு அதிகப்படியான வலிப்பு ஏற்பட்டது. புகைவண்டி நின்றவுடன் அவசர அவசரமாக அவனை (ஆட்டோவில்) மருத்துவரிடம் அழைத்து சென்றோம். மருத்துவர் அவனுக்கு ஊசி போட்டவுடன் அவன் இயல்புநிலைக்குத் திரும்பியிருந்தான். மருத்துவர் அவனை ஒரு நாள் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதிக்க வேண்டும். பிறகு நீங்கள் வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார். அதன் படியே நாங்கள் மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை முடித்து என் மகனுடன் நல்லமுறையில் வீடு திரும்பினோம். ஐயா கூறிய படியே நாங்கள் இறங்கும் இரயில் நிலையம் வரும் வரை அவனுக்கு ஐயாவின் அருளால் ஒன்றும் ஆகாமல் இருந்தது அப்படி ஏதாவது இடையில் அவனுக்கு வலிப்பு ஏற்பட்டிருந்தால். எங்கள் நிலை பரிதாபத்திற்குரியதாக இருந்திருக்கும்.

குறிப்பு: “ஐயாவின் வாக்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் வாக்கு”